யாழில் சிறுமி துஷ்-பிரயோகம்; குற்றவாளிகளை தப்ப வைக்க கை மாறிய 20 இலட்சம்

வட்டுக்கோட்டையில் 14 வயது சிறுமி மீது தவறான நடத்தை – பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இலஞ்சம்!

வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை சீரழித்த மரக்காலையின் உரிமையாளரார சின்னத்தம்பி என்பவரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் இலஞ்சம் பெற்றுவிட்டு அவர் உட்பட மூவரை வழக்கில் இருந்து விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 3 வருடங்களாக சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். அந்தவகையில் முதற்கட்டமாக இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் கைது செய்யப்பட்டனர். குறித்த பெண்கள் இந்த தவறான நடத்தைக்கு உடந்தையாக இருந்த காரணத்தினாலேயே இவ்வாறு இரண்டு பெண்களை கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேலும் இரண்டு ஆண்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் காப்பகத்தில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மரக்காலையின் உரிமையாளரான சின்னத்தம்பிக்கும் வட்டுக்கோட்டை பொலிசாருக்கும் இடையே நெருக்கமான உறவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பொலிசார் அவரை கைது செய்யாது அவரிடம் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் குறித்த மரக்காலை உரிமையாளரின் வீட்டிற்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிசார், அவரை பொலிஸ் நிலைய முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு சங்கானைப் பகுதியிலுள்ள மதுபான நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மூன்று மதுபான போத்தல்களை வாங்கியதுடன் 5 லட்சம் ரூபா இலஞ்சமுமம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தொல்புரத்தை சேர்ந்த ஜனனி என்ற பெண்ணொருவர் கடமை புரிகின்றார். இவர் மரக்காலை உரிமையாளரான சின்னத்தம்பி என்பவருக்கு உறவுக்காரர் ஆவார். இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சிறுமி வழங்கிய முறைப்பாட்டில் உள்ள சின்னத்தம்பி, நந்தகுமார் உட்பட நால்வரது பெயர்களை நீக்கியதுடன் அவர்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு உதவி புரிந்துள்ளார். இதற்கு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகமும் உடந்தையாக இருந்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மொத்தமாக 20 இலட்சம் ரூபா பணம் கைமாறியுள்ளதாகவும், இவர்களை விட இன்னமும் பலர் அந்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய வழக்கில் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியை சீரழித்த கொடூரர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்காது தமது சுயலாபங்களுக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகமும் இலஞ்சத்தை வாங்கிவிட்டு இவ்வாறு குற்றவாளியை தப்பிக்க வைத்தது மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இலஞ்சத்தை பெற்ற பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் தாய் அல்லது சகோதரிகளுக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவர்கள் இவ்வாறுதான் பணத்தினை வாங்கிவிட்டு வழக்கில் இருந்து விலகுவார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது

Exit mobile version