உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்; பிள்ளையானுக்கு முன்கூட்டியே தெரியும் – அமைச்சர் அதிரடி.!

2019ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (9) மீண்டும் சூடுபிடித்தன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, தாக்குதல்கள் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அத்துடன், முக்கிய உளவுத்துறை எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டதும், சாரா ஜாஸ்மின் குறித்த DNA பரிசோதனைகளில் ஏற்பட்ட சந்தேகங்களும் விசாரணையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜயபால, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று தெரிவித்தார். அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் இருந்தபோதே இந்தத் தகவல் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இது குறித்த விரிவான விசாரணைகள் தொடர்கின்றன, உரிய நேரத்தில் இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

பிள்ளையான், 2006ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்திக் காணாமலாக்கப்பட்ட வழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவரான அப்துல் லத்தீப் மொஹமட் ஜமீல் குறித்து தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து 2019 ஏப்ரல் 20 அன்று பெறப்பட்ட ஒரு முக்கிய எச்சரிக்கை குறித்து அரச புலனாய்வு சேவை (SIS) நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக அமைச்சர் விஜயபால நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version