Home இலங்கை செய்திகள் யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர்

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர்

13
0

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம் (02) 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.

கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, கஞ்சா இளவாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கஞ்சாவை பொதியிடும் நடவடிக்கைகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக இரண்டு ஊடகவியலாளர்கள் இளவாலை காவல் நிலையத்திற்கு சென்று தாங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரிய நிலையில், இளவாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு உடனடியாக பதில் கூறாமல் அசண்டயீனமாக செயற்பட்டுள்ளார்.

பின்னர் விசேட அதிரடிப்படையினர் சம்மதித்தால் செய்தி சேகரிப்பில் ஈடுபடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்பு விசேட அதிரடிப்படையினரிடம் சென்ற ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்தி விட்டு செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

கஞ்சாவை பொதியிட்ட பின்னர் காணொளி எடுக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்த நிலையில், அதற்கு சம்மதம் தெரிவித்த ஊடகவியலாளர்கள் வெளியே காத்திருந்தனர்.

இதன்போது இளவாலை காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஊடகவியலாளர்களை பார்த்து நீங்கள் யார் ? ஏன் வந்தீர்கள் என வினவியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனே குறித்த இளவாலை காவல்துறை உத்தியோகத்தர் ஊடகவியலாளர்களை மிரட்டும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களை கைப்பேசி பாவனை செய்ய வேண்டாம் என்றும், யாருடனும் அழைப்பு எடுத்து பேசக்கூடாது என்றும், கைப்பேசிகளை உள்ளே வைக்குமாறும் மிரட்டியுள்ளார்.

அதற்கு குறித்த ஊடகவியலாளர்கள், தாங்கள் தனிப்பட்ட விடயத்துக்கு கைப்பேசியை பாவிப்பதாக கூறிய பின்னரும் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீண்டும் அவர்களை மிரட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களை செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க கூடாது என்பது போலவே குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் செயற்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிகமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊடகவியலாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் கசிப்பு உள்ளிட்ட பல்வேறு போதைவஸ்துகள் விற்பனை மற்றும் பாவனை இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் காவல்துறையினர் உரிய கவனம் செலுத்தாமல் இருக்கும்போது இராணுவத்தினரும் மற்றும் விசேட அதிரடிப்படையினருமே பெரும்பாலான கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here