ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் இசைப் பெட்டியில் பாட்டுப் போட்டு ஆடிக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது அந்த இடத்திற்கு வந்த S.I சபேஷன், மைக்கல், ரொட்றிக்கோ மற்றும் சில பொலிஸ் அதிகாரிகள் குறித்த இளைஞர்கள் மீது உந்துருளியின் தலைக்கவசம், தடிகள் மற்றும் கைகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடாத்தி அதே இடத்தில் அவர்களை மண்டியிட வைத்ததுடன் பாட்டுப்படித்துக் கொண்டிருந்த 50000 ரூபாய் பெறுமதியான இசைப் பெட்டியை உடைத்து விட்டு கண்காணிப்பு கமரா இல்லை அதனால் பிரச்சினை இல்லை என கூறியுள்ளனர்.
அதன்பின்னர் அங்கு ஓடாத உந்துருளிக்கு அருகில் நின்ற சம்மளங்குளம் பகுதியைச் சேர்ந்த s.டனுஷன் என்பவர் மீது அபாயமாக வாகனம் செலுத்தியவர் என பொய்யாக வழக்குப் பதிவு செய்ததுடன் முள்ளியவளை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சங்கீர்த்தனன் மற்றும் ஒரு நபரையும் நேற்று இரவு 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் இது தொடர்பில் கேட்கச் சென்றவர்களை மிரட்டி உள்ளே அனுமதிக்காது திருப்பி அனுப்புவதுடன் தாங்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொள்வோம் அதன் பின்னர் வருகை தருமாறு கூறியுள்ளனர்.
அத்துடன், குறித்த பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலுக்கு இலக்கான பார்த்தீபன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீது பொலிஸ் தலைமையகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்படும்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம். குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.