திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட கனேசலிங்கம் சிந்துஜன் (35) என்ற அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருக்கு இன்று (15.07.2025) பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை திங்கட்கிழமை (14.07.2025) வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராகவும் குறித்த நபர் களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகி திலீபனது ஊர்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் குறித்த வழக்கு முறையற்ற விதத்தில் இடம்பெற்றிருந்தமையும், தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் முறையற்ற விதத்தில் விடுதலை செய்யப்பட்டமையும் பல்வேறுபட்ட தரப்புகளாக கண்டிக்கப்பட்ட நிலைமையில், பாதிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் துன்புறுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
தற்போது ஆட்சி பீடத்தில் உள்ள அரசாங்கம் தங்களுடைய முன்னாள் போராளிகளை நினைவேந்தும் உரிமையினை நிலை நிறுத்தி உள்ள நிலையில், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மாத்திரம் மறுக்கப்பட்டு வருவது சமூக செயற்பாட்டாளர்களால் கண்டிக்கப்படுகின்றது.