BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

வெலிக்கடை பொலிஸாரால் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த நிமேஷ் சத்சார (வயது25) என்ற இளைஞனின் பிரேதப் பரிசோதனை தொடர்பான நீதவான் விசாரணையை மே 16ஆம் திகதி தொடங்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியமளிக்க ஐந்து சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்புமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின்படி, உயிரிழந்த இளைஞனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு உடலைப் பிரேத பரிசோதனை செய்ததாகவும், அதன் ஆரம்பகட்ட அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் உடலின் சில பாகங்கள் தலைமை தடயவியல் மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது 22 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், முதல் ஐந்து பேர் மே 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோரிக்கையை பரிசீலித்த நீதவான் சாட்சிகளை 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts