யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மின் தகன மேடை அமைப்பதற்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக் குறிப்புகள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையில், இந்த எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரியாலை பகுதியை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பொலிஸாரின் முறைப்பாட்டின் பிறகு, இந்த விவகாரம் யாழ். நீதிமன்றில் பரிசீலனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்திற்கு கடந்த வியாழக்கிழமை நீதவான் விஜயம் மேற்கொண்டார். அப்போது, சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் தடயவியல் பிரிவு, மற்றும் நல்லூர் பிரதேச செயலர் ஆகியோர் சம்பவ இடத்தில் உடனிருந்தனர்.
அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நீதவான், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மீட்கப்பட்ட எலும்புத் துண்டுகளை பகுப்பாய்வுக்காக அனுப்பி, இடத்தை ஸ்கேனர் உதவியுடன் பரிசோதிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட வைத்திய அதிகாரி, எலும்புக் குறிப்புகள் பெரும்பாலும் மனித எலும்புகளாக உள்ளன என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த எலும்பு துண்டுகள் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அப்பகுதியில் ஸ்கேனிங் மூலம் ஆய்வு செய்ய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, கிருபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.