BREAKING

இந்திய செய்திகள்

டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பாரதிய ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.

இந்த வரலாற்று வெற்றி மூலம் பா.ஜ.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய, கட்சியின் மாநில தலைவரான வீரேந்த்திர சச்தேவா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

முதல்-மந்திரி பட்டியலில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா, ரேகா குப்தா, முன்னாள் முதல்-மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோர் உள்பட பல்வேறு பெயர்கள் இருந்தது. இதனிடையே பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு சென்றதால் அவர் வந்த பின்னர் புதிய முதல்-மந்திரி பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பியதும் டெல்லி மாநில தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவரான மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

புதிய முதல்-மந்திரி குறித்து நேற்று முன்தினமும் கட்சி மேலிடத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே புதிய அரசு பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து வந்தது.

கட்சி தலைமை முடிவின்படி, மேலிட பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத், ஓ.பி.தங்கர் ஆகியோர் முன்னிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் 48 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் டெல்லி மாநில சட்டசபை கட்சி தலைவராகவும், முதல்-மந்திரியாகவும் ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார்.

50 வயதாகும் ரேகா குப்தா, ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கல்லூரி பருவத்தில் இருந்தே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகி தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் 3 முறை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பா.ஜ.க கட்சியில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஷாலிமார் பார்க் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். தனது முதல் வெற்றியிலேயே முதல்-மந்திரியாகவும் தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைக்க ரேகா குப்தா உரிமை கோரினார்.

இந்நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்றார். அவருக்கு டெல்லி துணை நிலை கவர்னர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் மந்திரியுடன் 6 மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, , ராம்லீலா மைதானத்தில் தனது பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, காஷ்மீரி கேட்டில் உள்ள ஸ்ரீ மார்கட் வாலே ஹனுமான் பாபா கோவிலுக்கு ரேகா குப்தா சென்று வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை எனது அரசாங்கம் நிறைவேற்றும். மாதாந்திர உதவியின் முதல் தவணை மார்ச் 8 ஆம் தேதிக்குள் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எங்களது முதன்மையான முன்னுரிமை ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவது 48 பாஜக எம்எல்ஏக்களின் பொறுப்பாகும். பெண்களுக்கு நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். மார்ச் 8 ஆம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் தங்கள் வங்கி கணக்குகளில் 100 சதவீதம் உதவித்தொகையை பெறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts