முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இளைஞனின் படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (14.03.25)) மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பாக பல்வேறு சுலோகங்களை ஏந்திய வண்ணம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக, பொலிஸாரின் தன்னிச்சையான செயற்பாடுகளே இந்த விசாரணையின் பின்னணியில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாகவும் இந்த விசாரணைகளுக்காக விசேட குழு ஒன்றை நியமிப்பதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளித்தனர்.