யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று வைரவர் ஆலத்தில் க.பொ.த சாதாரண தர பரீடசை ஆரம்பித்த நாள்முதல் ஆறு நாட்களாக ஒலிபெருக்கிகளின் ஒலியால் பரீட்சையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர்.
குறிப்பாக அன்றைய பாடத்தினை இறுதி மீட்டல்செய்யும் நேரமான காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கிமூலம் ஒலிபெருக்கியின் விளம்பரம் என்ற பெயரில் மக்களால் சகிக்கமுடியாத மன உழைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒலியெழுப்பப்படுவதால் மக்களும் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பரீட்சை காலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தமுடியாது என கூறப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அம் மகிழ்ச்சி நீடிக்கவில்லை பல இடங்களில் குறிப்பாக இளவாலை பொலிஸ் பிரிவிலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளிலும் இக்கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பரீட்சை தவிர்ந்த காலங்களிலும் ஆக கூடியது நான்கு ஒலிபெருக்கிகள் மட்டும்தான் பாவிக்க முடியும் என தெரிவிக்கப்படாகிறது. அதுவும் 1980ஆம் ஆண்டு, 924/12 ம் இலக்க சுற்றாடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சத்தத்தின் எல்லை (Noise Level) பகல் நேரத்தில் 55 dB எல்லையை தாண்டாமலும்
இரவு நேரத்தில் 45 dB எல்லையை தாண்டாமலும் இருக்கவேண்டும் எனவும் வரையறைக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி இவ்வாலயத்தில் ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலியெழுப்பப்படுவது இளவாலை பொலிசாரினதும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினதும் அசண்டையீனத்தையே புலப்படுத்துகின்றது.
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அண்மைக்காலங்களிலும் இதே பிரிவில் சில வணக்க ஸ்தலங்களில் இவ்வாறான சட்ட மீறல்களை பொதுமக்கள் பொலிசாருக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலருக்கும் தொலபேசி மூலம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவளை ஒவ்வவரு பிரதேச செயலர் பிரிவுகளினாலும் ஒலிபெருக்கிகள் குறித்த கட்டுப்பாடுகளும் அவை தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்களும் அந்தந்த பிரதேச செயலர்களால் செயலகங்கிளின் உத்தியோகபூர்வ முகநூல்கள் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டபோதும் யாழ். மாவட்டத்தில் ஒலிபெருக்கியால் பெரிதும் பாதிக்கப்படும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் அவ்வாறு எவையும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்டவில்லை. அரச அதிபர் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.