சப்புகஸ்கந்த பொலிஸ் குற்றப்பிரிவின், பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரோஹித பிரியதர்ஷன என்பவருக்கு நீதி கோரி, குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட அதிகாரியின் சகோதரர் பாலித மனுவர்ண இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.
“சபுகஸ்கந்த குற்றப் பிரிவு அதிகாரி ரோஹித பிரியதர்ஷன, 1990, பெப்ரவரி 20, அன்று பட்டலந்த சித்திரவதைக் கூடத்தில், வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
எனினும் இன்றுவரை, தமது சகோதரருக்கு நீதி கிடைக்கவில்லை. இதற்குப் பின்னணியில் இருந்த மூளையாக, ரணில் விக்ரமசிங்கவே செயற்பட்டார்.
பொலிஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸ் மற்றும் அவரது குழுவினர், விக்ரமசிங்கவின் கட்டளையின் கீழ் செயற்பட்டனர். எனவே, அவரையும், பொலிஸ் அதிகாரி கீர்த்தி அத்தப்பத்துவையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என்று முறைபாட்டாளர் கோரியுள்ளார்
1990 ஆம் ஆண்டில், ரோஹித பிரியதர்ஷன, சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் குற்றப் பிரிவின் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
களனிப் பிரிவில் நடந்த பல பெரிய திருட்டுகள் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் உட்பட ஏராளமான குற்றங்களைத் தீர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.